மறைந்த எனது தாத்தா ஆ.முத்தையா நாடார் அவர்கள் விருதுநகரில் அவரது வாலிப பிராயத்தில் மிக்சர் வண்டிக் கடை போட்டிருந்தார்.இந்த தலைமுறையினருக்கு மிக்சர் வண்டி என்றால் புதிதாக தோணும். இன்று ஐரோப்பாவில் வண்டிக் கடைகள் என சொல்லப்படும் மொபைல் ஃபுட் கோர்ட் டின் நம்மூரு வடிவம் தான் மிக்சர் வண்டி. நான்கு சைக்கிள் டயர்கள் கொண்ட நீள் செவ்வக கண்ணாடி பொருத்தப்பட்ட மரச்சட்ட மடிப்பு கதவு கொண்ட வண்டி அது. வண்டியின் உள்புறம் இரண்டு அடுக்கு பலகையில் நடுமையமாய் சிறு தராசும் அதன் அருகில் சிறு கல்லா பெட்டி ( Cash Box )யும் அதன் இரு புறங்களிலும் அலுமினிய தட்டுகளில் ஓமப் பொடி, காராப்பூந்தி, வறுத்த மசால் நவதானியம், மசால் கடலை, காரக் கடலை, சீவல், மிளகு காரச் சேவை, பட்டர் சேவை, நெய்க் கடலை பக்கோடா, உருளைக் கிழங்கு மசால், மைசூர்பா, லட்டு,கோதுமை ஹல்வா,சீரணி மிட்டாய் ( ஜிலேபி பின்னாட்களில் வந்து ஒட்டிக் கொண்டது) இவற்றுடன் கட்டுரை நாயகன் பால் பன் அம்பாரமாய் அடுக்கி நிற்கும். உள்புறம் ஒரு பெட்ரோ மாக்ஸ் விளக்கும் உண்டு.காலை முழுவதும் பலகார தயாரிப்பு ,மாலை வண்டியில் அடுக்கி வைத்து விற்பனை என்பதால் பெட்ரோ மாக்ஸ் விளக்கு கட்டாயம்! பெட்ரோ மாக்ஸ் லைட் இருப்பதால் பெட்டிக்குள் பரவும் வெப்பத்தால் பலகாரம் சூடாக இருக்குதா இல்லை அன்றாட ,அப்போதைய தயாரிப்பு என்பதால் சூடாக இருக்குதா என்கிற என் சந்தேகம் இன்றுவரை இருக்கிறது. ஏனெனில் 50 பைசாவுக்கு மிக்சர் கேட்டால் மட மட வென்று பேப்பரை மடக்கி வெறும் கையால் சிறிது ஓமப் பொடி,சிறிது காராப்பூந்தி ,சேவை,நவதானியம் கொஞ்சம் போட்டுக் கொடுப்பார்.கையில் வாங்கும் போதே வெது வெதுப்பு தெரியும். அவர் தயாரிக்கும் பால் பன் சுவை என்று உறவினர்களும் அந்த கால வயதினரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.பிறகு அவர் திருமங்கலம் இடம் பெயர்ந்து ஓட்டல் தொழிலுக்கு மாறி விட்ட நிலையில் அவரது தயாரிப்பு பால் பன் சாப்பிட வாய்ப்பு இள வயதில் கிடைக்கவில்லை. அப்போதெல்லாம் திருமங்கலம் தெற்கு தெரு பகுதியில் இருந்து ஒருவர் ( என் நினைவு சரியென்றால் அவர் பெயர் கருப்பையா) மிக்சர் வண்டி தள்ளி வியாபாரம் செய்து வருவார். இவரது மிக்சர் வண்டி தாத்தாவின் வண்டியில் இருந்து மாறுபட்டது. வண்டியின் மேல் உள்ள பெட்டி சற்று உயரமாக கிட்டதட்ட 3" ×4" சைஸ் கொண்டதாக இருக்கும். சுற்றிலும் அலங்காரமாக கலர் கண்ணாடிகள் பொருத்தியிருக்கும்.பெட்டியின் மேற்கூரையில் பெட்ரோ மாக்ஸ் லைட் தொங்க விடப் பட்டிருக்கும்.தாத்தாவின் வண்டியில் சொன்ன அதே விவரணைகளுடன் பலகாரங்கள் அடுக்கியிருக்க நடு நாயகமாக அவரின் சிக்னேச்சர் ஸ்னாக்ஸ் உருளைக் கிழங்கு மசால்! பலரின் இரவு உணவுக்கு பக்கோடாவுக்கு இணையாக விற்பனையாகும் அன்று! அவரிடம் பால் பன் அருமையாக இருக்கும்.மாலை தெற்கு தெருவில் இருந்து வண்டியை உருட்டியபடியே தனியாளாக நகரின் அன்றைய பிரதான வீதிகளான பசும்பொன் தெரு, பெரியகடை வீதி, சின்னக்கடை வீதி விருது நகர் ரோடு உசிலம்பட்டி ரோடு வழியே மாலை 6.00 மணிக்கெல்லாம் ஆனந்தா தியேட்டர் டிரான்ஸ்போர்மர்ஸ் முன் வந்து வண்டியை நிறுத்தி விடுவார். கிராமங்களுக்கு திரும்பிச் செல்லும் விவசாயிகள் ,மில் வேலை முடிந்து வரும் ஊழியர்கள், அருகே தேவர் திடலில் அரசியல் கட்சிகளின் மேடைப் பேச்சு கேட்க வரும் தோழர்கள்,திரையரங்கு வரும் கூட்டம் என்று அவருக்கு ஒரு தனி வாடிக்கையாளர் கூட்டமே இருந்தது.இரவு 10.30 க்கு இரண்டாம் ஆட்டம் துவங்கும் முன் வியாபரத்தை முடித்துக் கொண்டு ( சில நேரங்களில் சரக்கு தீர்ந்து விட்டால் முன்னமே கிளம்பி விடுவார்) விருதுநகர் ரோடு வழியே தெற்குதெரு சென்று விடுவார். இன்று அவரும் இல்லை. அந்த அழகு கண்ணாடி பெட்டி மிக்சர் வண்டியும் இல்லை. அருப்புக்கோட்டை சத்திரிய சைவ பானு பெண்கள் பள்ளி அருகே தெப்பக்குளம் விநாயகர் கோவில் எதிரே ஒரு டீக்கடையில் கண்டேன் மதுரமான பால் பன்னை! இன்றைய தலைமுறையினர் சாப்பிடும் பால் பன் என்ற பெயர் கொண்டதல்ல அது. அது தான் ஒரிஜினல் மெத்தட்! இரவு முழுதும் தயிர் , கலந்து அடித்து ஊற வைக்கப்பட்ட மைதா மாவு அதிகாலையில் பொன்னிறமாக பொறித்து இன்றைய கருப்பட்டி கட்டி போல தட்டில் அம்பாரமாய் அடுக்கி ( உள்ளங்கை அளவுதான் சைஸ் இருக்கும், இப்போதெல்லாம் பால் பன் என சொல்லப் படுபவை ரெண்டு கை சேர்த்த சைசில் இருக்குது) அதன் மேல் வெண்ணிற அருவியாய் சீனிப் பாகு ஊற்றி உறைந்து எவரெஸ்ட் பனி மலையில் பனி உருகியும் உருகாததுமான தோற்றத்தில் இருக்கும். கடைசியாய் பார்த்தது அந்த டீக்கடையில் தாம்! டீக்கடை ஓனர் சொன்னது எனக்கு பிறகு இந்த பக்குவத்தை செய்ய பழக யாரும் முன் வர வில்லை. அநேகமாக என்னுடன் இது முடிந்து விடும் என்றார்! அதன் பிறகு பல முறை அருப்பு கோட்டை சென்றும் அவர் கடைக்கு செல்லும் வாய்ப்பு அரிதாகிவிட்டது! இப்போதும் இருக்கிறதா என தெரிய வில்லை!
#பால்பன்