About Me

My photo
பாலகிருஷ்ணன் பரமசிவம் ஆகிய நான் மதுரை மாவட்டம் திருமங்கலம் வாசி, சமூகத்தின் ஒரு அங்கமென்பதால் என்னைப்பற்றியும் ,எமது ஊர் பற்றியும், எம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை பகிரும் தளம் என இந்த Blogspot ஐ உபயோகிக்க விரும்புகிறேன்.

Thursday, April 11, 2024

பால் பன்

 மறைந்த எனது தாத்தா  ஆ.முத்தையா நாடார் அவர்கள் விருதுநகரில் அவரது வாலிப பிராயத்தில் மிக்சர் வண்டிக் கடை போட்டிருந்தார்.இந்த தலைமுறையினருக்கு மிக்சர் வண்டி என்றால் புதிதாக தோணும். இன்று ஐரோப்பாவில் வண்டிக் கடைகள் என சொல்லப்படும் மொபைல் ஃபுட் கோர்ட் டின் நம்மூரு வடிவம் தான் மிக்சர் வண்டி. நான்கு சைக்கிள் டயர்கள் கொண்ட நீள் செவ்வக கண்ணாடி பொருத்தப்பட்ட மரச்சட்ட மடிப்பு கதவு கொண்ட வண்டி அது. வண்டியின் உள்புறம் இரண்டு அடுக்கு பலகையில் நடுமையமாய் சிறு தராசும் அதன் அருகில் சிறு கல்லா பெட்டி ( Cash Box )யும் அதன் இரு புறங்களிலும் அலுமினிய தட்டுகளில் ஓமப் பொடி, காராப்பூந்தி, வறுத்த மசால் நவதானியம், மசால் கடலை, காரக் கடலை, சீவல், மிளகு காரச் சேவை, பட்டர் சேவை, நெய்க் கடலை பக்கோடா, உருளைக் கிழங்கு மசால், மைசூர்பா, லட்டு,கோதுமை ஹல்வா,சீரணி மிட்டாய் ( ஜிலேபி பின்னாட்களில் வந்து ஒட்டிக் கொண்டது) இவற்றுடன் கட்டுரை நாயகன் பால் பன் அம்பாரமாய் அடுக்கி நிற்கும். உள்புறம் ஒரு பெட்ரோ மாக்ஸ் விளக்கும் உண்டு.காலை முழுவதும் பலகார தயாரிப்பு ,மாலை வண்டியில் அடுக்கி வைத்து விற்பனை என்பதால் பெட்ரோ மாக்ஸ் விளக்கு கட்டாயம்! பெட்ரோ மாக்ஸ் லைட் இருப்பதால் பெட்டிக்குள்  பரவும் வெப்பத்தால் பலகாரம் சூடாக இருக்குதா இல்லை அன்றாட ,அப்போதைய தயாரிப்பு என்பதால் சூடாக இருக்குதா என்கிற என் சந்தேகம் இன்றுவரை இருக்கிறது. ஏனெனில் 50 பைசாவுக்கு மிக்சர் கேட்டால் மட மட வென்று பேப்பரை மடக்கி வெறும் கையால் சிறிது ஓமப் பொடி,சிறிது காராப்பூந்தி ,சேவை,நவதானியம் கொஞ்சம் போட்டுக் கொடுப்பார்.கையில் வாங்கும் போதே வெது வெதுப்பு தெரியும். அவர் தயாரிக்கும் பால் பன் சுவை என்று உறவினர்களும் அந்த கால வயதினரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.பிறகு அவர் திருமங்கலம் இடம் பெயர்ந்து ஓட்டல் தொழிலுக்கு மாறி விட்ட நிலையில் அவரது தயாரிப்பு பால் பன் சாப்பிட வாய்ப்பு இள வயதில் கிடைக்கவில்லை. அப்போதெல்லாம் திருமங்கலம் தெற்கு தெரு பகுதியில் இருந்து ஒருவர் ( என் நினைவு சரியென்றால் அவர் பெயர் கருப்பையா) மிக்சர் வண்டி தள்ளி வியாபாரம் செய்து வருவார்.  இவரது மிக்சர் வண்டி தாத்தாவின் வண்டியில் இருந்து மாறுபட்டது. வண்டியின் மேல் உள்ள பெட்டி சற்று உயரமாக கிட்டதட்ட 3" ×4" சைஸ் கொண்டதாக இருக்கும். சுற்றிலும் அலங்காரமாக கலர் கண்ணாடிகள் பொருத்தியிருக்கும்.பெட்டியின் மேற்கூரையில் பெட்ரோ மாக்ஸ் லைட் தொங்க விடப் பட்டிருக்கும்.தாத்தாவின் வண்டியில் சொன்ன அதே விவரணைகளுடன் பலகாரங்கள் அடுக்கியிருக்க நடு நாயகமாக அவரின் சிக்னேச்சர் ஸ்னாக்ஸ் உருளைக் கிழங்கு மசால்! பலரின் இரவு உணவுக்கு பக்கோடாவுக்கு இணையாக விற்பனையாகும் அன்று! அவரிடம் பால் பன் அருமையாக இருக்கும்.மாலை தெற்கு தெருவில் இருந்து வண்டியை உருட்டியபடியே தனியாளாக நகரின் அன்றைய பிரதான வீதிகளான பசும்பொன் தெரு, பெரியகடை வீதி,  சின்னக்கடை வீதி விருது நகர் ரோடு உசிலம்பட்டி ரோடு வழியே மாலை 6.00 மணிக்கெல்லாம்  ஆனந்தா தியேட்டர்  டிரான்ஸ்போர்மர்ஸ் முன் வந்து வண்டியை நிறுத்தி விடுவார். கிராமங்களுக்கு திரும்பிச் செல்லும் விவசாயிகள் ,மில் வேலை முடிந்து வரும் ஊழியர்கள், அருகே தேவர் திடலில் அரசியல் கட்சிகளின் மேடைப் பேச்சு கேட்க வரும் தோழர்கள்,திரையரங்கு வரும்  கூட்டம் என்று அவருக்கு ஒரு தனி வாடிக்கையாளர் கூட்டமே இருந்தது.இரவு 10.30 க்கு இரண்டாம் ஆட்டம் துவங்கும் முன்  வியாபரத்தை முடித்துக் கொண்டு ( சில நேரங்களில் சரக்கு தீர்ந்து விட்டால் முன்னமே கிளம்பி விடுவார்) விருதுநகர் ரோடு வழியே தெற்குதெரு சென்று விடுவார். இன்று அவரும் இல்லை. அந்த அழகு கண்ணாடி பெட்டி மிக்சர் வண்டியும் இல்லை.  அருப்புக்கோட்டை சத்திரிய சைவ பானு பெண்கள் பள்ளி அருகே தெப்பக்குளம் விநாயகர் கோவில் எதிரே ஒரு டீக்கடையில் கண்டேன் மதுரமான பால் பன்னை! இன்றைய தலைமுறையினர் சாப்பிடும் பால் பன் என்ற பெயர் கொண்டதல்ல அது. அது தான் ஒரிஜினல் மெத்தட்! இரவு முழுதும் தயிர் , கலந்து அடித்து ஊற வைக்கப்பட்ட  மைதா மாவு அதிகாலையில் பொன்னிறமாக பொறித்து இன்றைய கருப்பட்டி கட்டி போல தட்டில் அம்பாரமாய் அடுக்கி ( உள்ளங்கை அளவுதான் சைஸ் இருக்கும், இப்போதெல்லாம் பால் பன் என சொல்லப் படுபவை ரெண்டு கை சேர்த்த சைசில் இருக்குது) அதன் மேல் வெண்ணிற அருவியாய் சீனிப் பாகு ஊற்றி உறைந்து எவரெஸ்ட் பனி மலையில் பனி உருகியும் உருகாததுமான தோற்றத்தில் இருக்கும். கடைசியாய் பார்த்தது அந்த டீக்கடையில் தாம்! டீக்கடை ஓனர் சொன்னது எனக்கு பிறகு இந்த பக்குவத்தை செய்ய பழக யாரும் முன் வர வில்லை. அநேகமாக என்னுடன் இது முடிந்து விடும் என்றார்! அதன் பிறகு பல முறை அருப்பு கோட்டை சென்றும் அவர் கடைக்கு செல்லும் வாய்ப்பு அரிதாகிவிட்டது! இப்போதும் இருக்கிறதா என தெரிய வில்லை!

#பால்பன்


Wednesday, December 23, 2015

புனையப்படும் வரலாறு !

                                                               சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் அமையப்பெற்றுள்ள  அருள்மிகு மீனாட்சியம்மன் சொக்கநாதர் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா நடைபெற்றது.விழாவில் கலந்து கொண்ட அந்நாளைய சட்டமன்ற சபாநாயகரும், ஆன்மீகஈடுபாடு உடையவருமான மறைந்த திரு.P.T.R.பழனிவேல்ராஜன் அவர்கள் அப்போது சொற்பொழிவாற்றும் போது சொன்ன விஷயங்களில் ஒன்று திருமங்கலம் என்று ஊருக்கு பெய்ர்க்காரணம்! அவர் கூறியது  இது தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் போது மீனாட்சியம்மன் திருமணத்துக்கு தாலி செய்து கொடுத்த ஊர் என்பதால் இந்த ஊருக்கு திருமாங்கல்யம் என்ற பெயராகி,மருவி திருமங்கலம் என்றானது !
                                                            ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு முன்பு வரை யாரும் திருமங்கலம் என்ற ஊருக்கு அந்த பெயர் வந்த காரணம் இது என்று யாரும் சொன்னதில்லை!சொன்னவர் சபாநாயகர் என்பதால் இந்த கருத்து வலுப்படுத்தப்பட்டு வருகிறது இன்று வரை!
                                                           பலதலைமுறைகளாய் இவ்வூரில் குடியிருக்கும் பலரிடம் பேசிப்பார்த்ததில் யாருமிப்படி ஒரு பின்னணி இருப்பதாக சொல்லவில்லை .சொன்னவர்களும் சபாநாயகர்சொல்லிதான் தெரியும் என்றார்களே தவிர அவர்களின் முன்னோர்கள் சொல்லவில்லை என்றே சொன்னார்கள்! எந்தவொரு ஆவணங்களோ,அரசு தஸ்தாவேஜுகளோ அல்லது செப்பேடுகளோ இந்த ஊருக்கான பெயர்க்காரணத்தைஇது வரை சொல்லியதில்லை.அதற்கு மாறாக தொடர்ந்து இந்த செய்தியை அழுத்தி பரப்புவதன் காரணம் புரியவில்லை!
                                                           தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்பெயர்களை ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சி மணவர்கள் குடி, பட்டி, ஏந்தல், ஏடு, பாக்கம், ஏரி, கரை,குளம் மற்றும் மங்கலம் இப்படி முடியும் ஊர் பெயர்களுக்கு காரணம் கண்டு எழுதி வருகின்றனர்.இதில் மங்கலம் (மங்களம் அல்ல) என்று முடியும் ஊர்களுக்கு அர்த்தம் அரசனால் பிராமணர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம்  மங்கலம் என்பதாம்!நான்கு வேதங்கள் அறிந்த பிராமணனுக்கு கொடுத்த நிலம் சதுர்வேதிமங்கலம் ,3வேதங்கள அறிந்த் பிராமணனுக்கு கொடுத்த நிலம் திரிவேதி மங்கலம்,2 வேதங்கள் அறிந்த் பிராமணனுக்கு கொடுத்த நிலம் துவிவேதி மங்கலம், பட்டர்களுக்கு கொடுத்த நிலம் பட்டமங்கலம்,வேதம் ஓத மட்டும் தெரிந்த பிராமணனுக்கு கொடுத்த நிலம் திருமங்கலம் என்பதே லாஜிக்காக இருக்கிறது.
                                             
                                           
                                                                                                                                                               திருமங்கலம் P.K.N. ஆண்கள் மேல்நிலைபள்ளியிலிருந்து 1968ல் வெளி வந்த் பள்ளியின்  வைரவிழா மலரில் 38,39-ம் பக்கங்களில் அப்போதைய தமிழாசிரியர் திரு. ஆதி.பாலசுந்தரன் அவர்கள் திருமங்கலம் என்ற தலைப்பில் எழுதிய கட்டூரையில் மேற்கானும்  கருத்தை ஒட்டிய செய்தியை உள்ளடக்கி எழுதியுள்ளார்..அதில் எந்த இடத்திலும் மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் வழங்கியதாக செய்தி இல்லை!!
                         

   
                                  
     
                                               இதனை முழு ஆதாரமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எமது  எண்ணமில்லை. ஆனால் புனையப்படும் வரலாறு குறித்த சிறு கவலையே!நமக்கு தேவை ஆதாரமே யன்றி கற்பனை சுவையல்ல!
-மலர் தந்து உதவிய  பிகேஎன் பள்ளி நிர்வாகத்துக்கு நன்றி 

Friday, November 13, 2015

சந்திப்பு

தேவனுடனான சாத்தானின் சந்திப்பு இப்படியாகத்தான் இருந்தது.
"நீ எப்படி உன்னுடைய நியாயக்காரனின் வேண்டுதலையும்,அநியாயக்காரனின் வேண்டுதலையும் ஒன்றாகவே பாவிக்கிறாய்?"-இது சாத்தான்!
"ஆம்..!ஒரு கண்ணில் சுண்ணாம்பும் ஒரு கண்ணில் வெண்ணையும் வைக்கும் வழக்கம இல்லை!"-இது தேவன்!
"இந்த இருவரின் ஒரே மாதிரியான வேண்டுகோளை எப்படி ஒரேஅளவு கோலால் அளப்பாய்?"
"நியாயக்காரனுக்கு அதற்கான தகுதியைக் கொடுப்பேன்.அநியாயக்காரனுக்கு கொடுத்தபின் தகுதியை உயர்த்திக்கொள்கிறானா என்று பார்ப்பேன்.தகுதியால் அடைந்தவனை அரவனைத்துகொள்வேன்...தகுதியற்றவனை உயர்த்திப் பிடிப்பேன்..!
"ஏன்?"
"பிறர் பார்க்க அவன் மூக்கை அறுக்க அந்த உயரம் தேவை ! -சொல்லி புன்னகைத்தான் தேவன்!

-------------------------------------------------------------------------------------------------------------------------------
நியாயக்காரனுடனான அநியாயக்காரனது சந்திப்பு இப்படியாகத்தான் இருந்தது.
"உனக்கு தேவனுடனான நம்பிக்கை எப்படி வந்தது?"-இது அநியாயக்காரன்!
"நம்பிக்கை இருந்ததாலேயேதான் வேண்டுதல் வைத்தேன்! நீ எப்படி இவ்விசயத்தில்?"-இது நியாயக்காரன்!
"வேண்டுதல் பலித்ததால் நம்பிக்கை வந்தது...விரும்பியது பறி போனதால் நம்பிக்கை இழந்தேன்..."
"கொடுக்கிறவனுக்கு எடுக்கவும் உரிமை உண்டல்லவா?"
"புரியவில்லையே? "
"ஆண்டவரே ! இவர்கள் செய்வது இன்னதென்று அறியாது இருக்கிறார்கள்! இவர்களை மன்னியும்!
-------------------------------------------------------------------------
இது மதம் சார்ந்த பதிவல்ல..! இதில் அல்லாஹ் என்றோ,காளி என்றோ ஏன் பொருத்தமான இடங்களில் நானும் நீயும் என்று கூட எழுதி படித்து பார்த்துக் கொள்ளலாம்!

Saturday, August 15, 2015

வந்தே மாதரம்....!

இந்நேரம் வழமையான சம்பிரதாயங்களுடன் முடிந்திருக்கும்  சுதந்திர தின கொண்டாட்டங்கள் அனைத்தும்!...திட்டியும், வாழ்த்தியும் பதிவுகள் எழுதி ஊடகங்களில் தூள் கிளப்பியிருப்பார்கள் புதிய தலைமுறையினர்...நண்பர் ஒருவர் https://web.facebook.com/rajarajan1969?fref=photo  சுதந்திர போராட்ட காலத்தில் சுதேசி கப்பல் கழகம் நடத்திய வ.உ.சிதம்பரனார் அவர்களின்  போராட்ட கால தோழர் சுப்ரமணிய சிவா
அவர்களின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். உண்மையில் அவ்ர்தானா என்று சிறிது ஐயத்துடன் கேட்டிருந்தேன்..கேட்கும்போதே மனதில் சிறு அவமானமும் , கலக்கமும் இருந்தன.நான் என் ஞாபக மறதியை சபித்து கொண்டேன்.எத்தனையோ முகமறியா சுதந்திர போராட்ட தியாகிகளிடையே முகம் அறிந்தவர்களையாவது மறக்காமல் இருக்கவேண்டுமே..! 40வயதில் நமக்கு நினைவுதடுமாற்றம் என்றால் இந்த தலைமுறையினர்  சுதந்திர போராட்டத்தை பற்றி முழுதும் அறிந்திருப்பார்களா என்ன? அவர்களுக்கு நாம் விடுதலை பெற்ற விதத்தை உணர்த்த மறந்திருப்பது  நம்முடைய குறையே ஆகும். பள்ளியில் மூவர்ண தேசியக்கொடிஏற்றி விழா முடிந்த கையோடு வீடு திரும்பிய் போது ,வீட்டில் அண்ணன் மகள் ,"சித்தப்பா..! ஸ்கூல்ல நாளைக்கு சுதந்திர போராட்டம் பற்றி ஆக்டிவிட்டீஸ்  சப்மிட் பண்ணனும்...ஹெல்ப் பண்ணுங்க...!"ன்னு கேட்க ..ரொம்ப உற்சாகமாய் சுதந்திர போராட்ட வரலாறுகளை விவரிக்க ஆரம்பித்தேன்....இன்று நிஜமான சுதந்திர தின நாள் கொண்டாடிய சந்தோசம்.....!